பண்ணைக்குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயம்; கலெக்டர் தகவல்

மாவட்டத்தில் பண்ணக்குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவி

Update: 2019-06-24 22:00 GMT

சிவகங்கை,

கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மழை பெய்கிற போது நிலத்தில் வழிந்தோடுகின்ற மழைநீரை சேகரித்து பண்ணைக் குட்டைகள் அமைத்து சேகரித்து வைக்கலாம். இதன் மூலம் அந்த நிலத்தில் பயிர்கள் நீர் இல்லாமல் வறட்சியால் வாடும் நிலை ஏற்படும் போது பயிர்களுக்குத் தக்க நேரத்தில் உயிர் பாசனம் மற்றும் துணை பாசனம் அளிக்க பயன்படுகிறது.

இதனால் பயிர்கள் காக்கப்பட்டு உரிய மகசூல் பெற வகை செய்கிறது. பண்ணைக் குட்டைகள் சிறந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பாகவும், சிக்கனமானதாகவும், விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற அமைப்பாகும். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு காவிரி டெல்டா கடை மடை விவசாயிகள் மற்றும் கடலோர பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 10 ஆயிரம் பண்ணைக் குட்டைகள் ரூ.100 கோடி செலவில் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மாவட்டத்தில் 2–வது கட்டமாக 500 பண்ணைக் குட்டைகள் 100 சதவீத மானியத்தில் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட உள்ளன.

எனவே, இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள சிவகங்கை வருவாய் கோட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிவகங்கை–தொண்டி ரோடு (அரசு போக்குவரத்துப் பணிமனை அருகில்), வேளாண்மைப் பொறியியல்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், தேவகோட்டை வருவாய் கோட்டத்தை சேர்ந்த விவசாயிகள் காரைக்குடி சூடாமணிபுரம் 1, புகழேந்தி தெருவில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்