சட்டசபை எதிர்க்கட்சி தலைவரானார், விஜய் வடேடிவார் முதல்-மந்திரி பட்னாவிஸ் வாழ்த்து

சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக விஜய் வடேடிவார் நியமிக்கப்பட்டார். அவருக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்து கூறினார்.

Update: 2019-06-24 23:56 GMT
மும்பை,

காங்கிரஸ் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வந்த ராதாகிருஷ்ண விகே பாட்டீல் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைந்தார். அவருக்கு சமீபத்தில் மந்திரி பதவி அளிக்கப்பட்டது.

தற்போது சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் காலியாக இருந்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியில் நேற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வடேடிவார் நியமிக்கப்பட்டார்.

அவருக்கு நேற்று சட்டமன்றத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்து தெரிவித்து பேசியதாவது, “எங்களுக்கு தரமான மற்றும் ஆக்கப்பூர்வமான எதிர்தரப்பு தேவை. இந்த ஆட்சியை தொடர்ந்து கண்காணிக்கும் பலமான தலைவராக திகழ அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். மேலும் பலரும் அவரை வாழ்த்தி பேசினர்.

அவர்களுக்கு விஜய் வடேடிவார் நன்றி தெரிவித்து பேசுகையில், “எனக்கு எதிர்க்கட்சி தலைவராக செயல்பட மிக குறைந்த காலமே கிடைத்துள்ளது. இருப்பினும் முடிந்த அளவுக்கு மக்களின் பிரச்சினையை அரசின் கவனத்துக்கு கொண்டுவர முடிவு செய்வேன். என் மீது கொடுக்கப்பட்ட எந்தவொரு பொறுப்பையும் நான் முழுமையாக பயன்படுத்துவேன்” என்றார்.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற விஜய் வடேடிவார், இந்திய தேசிய மாணவர் யூனியனில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் சிவசேனாவில் இணைந்த அவர், 1998 முதல் 2004-ம் ஆண்டு வரை எம்.எல்.சி.யாக பதவி வகித்தார். 2004-ம் ஆண்டு சிவசேனா சார்பில் செம்பூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.

2005-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்த அவர் இடைத்தேர்தலில் அதே தொகுதியை கைப்பற்றினார். காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மந்திரி பதவியையும் வகித்துள்ளார்.

மேலும் செய்திகள்