புதிய தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

புதிய தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி திருவாரூரில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புதிய கல்வி கொள்கை நகலை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-25 23:00 GMT
திருவாரூர்,

மத்திய அரசு புதிய தேசிய கல்வி கொள்கையை அறிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும். மும்மொழி திட்டத்தை கைவிட வேண்டும். தமிழக மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதற்கு மத்திய அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க கிளை தலைவர் அஜித் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சிவா முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாவட்ட தலைவர் சுர்ஜித், மாநில துணை செயலாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது புதிய கல்வி கொள்கை நகலை தீவைத்து எரித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்