காசோலை மோசடி வழக்கில் பால் வியாபாரிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவு

காசோலை மோசடி வழக்கில் பால் வியாபாரிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-06-25 22:15 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூர் நடுத்தெருவை சேர்ந்தவர் நைனப்பன்(வயது 63). பால் வியாபாரி. அதே ஊரை சேர்ந்தவர் ரமேஷ் (53). லாரி உரிமையாளர். இருவருக்கும் இடையே பழக்கத்தின் அடிப்படையில் ரமேஷ் தனது தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக நைனப்பனிடம் கடந்த 2014-ம் ஆண்டு ரூ.3 லட்சம் கடன்பெற்றார். இந்த கடன்தொகையை திருப்பித்தருமாறு நைனப்பன், ரமேஷிடம் பலமுறை கேட்டுள்ளார். அதற்கு ரமேஷ் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலை கொடுத்துள்ளார். ஆனால் அந்த கணக்கில் பணமின்றி காசோலை திரும்பி வந்துவிட்டது. இதனால் பாதிப்பிற்குள்ளான நைனப்பன், ரமேஷ் மீது பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ரூ.3 லட்சம் இழப்பீடு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்பிரசாத், காசோலை மோசடி வழக்கில் ரமேஷிற்கு 2 மாதம் சிறைதண்டனையும், ரூ.3 லட்சம் இழப்பீடு தொகையும், இழப்பீட்டு தொகையை தர தவறும்பட்சத்தில் மேலும் ஒருமாதத்திற்கு சிறைதண்டனை அனுபவிக்குமாறு கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ரமேஷ் பெரம்பலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி லிங்கேஸ்வரன், ரமேஷ் மீது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். ரமேஷிடம் இருந்து ரூ.3 லட்சம் இழப்பீடு தொகையை வசூலித்து நைனப்பனுக்கு வழங்கவும், ரமேஷ் மீது போலீசார் நடவடிக்கைக்கு உரிய பிடிகட்டளை (வாரண்ட்) வழங்குமாறு குற்றவியல் நீதிபதிக்கு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்