சிறுவனை கொன்ற வழக்கில் தாய் மாமனுக்கு ஆயுள் தண்டனை நாகை கோர்ட்டு உத்தரவு

வேளாங்கண்ணியில் சிறுவனை கொன்ற வழக்கில் தாய்மாமனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-06-26 23:15 GMT
நாகப்பட்டினம்,

நாகையை அடுத்த வேளாங்கண்ணி நிர்த்தனமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஜிம்மிகார்டன். இவரது மனைவி உஷா. இவர்களது மகன்கள் ராபர்ட்(வயது 12), ராபின். உஷாவின் தம்பி அந்தோணி(25). இவர், சிறு வயது முதல் தனது அக்கா வீட்டில் வளர்ந்து வந்தார். கடந்த 2012-ம் ஆண்டு உஷா, சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திருவாரூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் வீட்டில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை காணவில்லை என்று கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 24-ந் தேதி ஜிம்மிகார்டன் தேடினார். அப்போது ராபர்ட், பணத்தை மாமா அந்தோணி எடுத்தார் என்று கூறினார். இதனால் அந்தோணி விரக்தியடைந்தார்.

அன்றைய தினம் இரவு தூங்குவதற்காக அந்தோணி, ராபர்ட், ராபின் ஆகிய 3 பேரும் சென்றனர். அப்போது ராபர்ட் கழுத்தை நெறித்து அந்தோணி கொலை செய்தார். இதை ராபின் பார்த்து விட்டார். உடனே நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உன்னையும் கொலை செய்து விடுவேன் என அந்தோணி, ராபினையும் மிரட்டினார்.

இந்த சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து ராபர்ட்டை, அந்தோணி கொலை செய்தது குறித்து ராபின், தனது தந்தையிடம் கூறினார். இதுகுறித்து ஜிம்மிகார்டன், வேளாங்கண்ணி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணியை கைது செய்தனர்.

இந்த வழக்கு நாகை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி பத்மநாபன் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில், அந்தோணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்