புஞ்சைபுளியம்பட்டி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் பணம் கேட்டு தாக்குதல்; போலி நிருபர் உள்பட 7 பேர் கைது

புஞ்சைபுளியம்பட்டி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் பணம் கேட்டு தாக்கிய போலி நிருபர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-26 23:15 GMT

புஞ்சைபுளியம்பட்டி,

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சொலவனூர் மேடு பகுதியை சேர்ந்தவர் மருதாள் என்கிற மரகதம் (வயது 50). இவர் மீது ஏற்கனவே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததாக வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் மரகதத்தின் வீட்டின் முன்பு 2 மோட்டார்சைக்கிள்கள் வந்து நின்றன.

அந்த மோட்டார்சைக்கிள்களில் இருந்து இறங்கிய 4 பேர் மரகதம் வீட்டின் உள்ளே சென்று அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். பின்னர் அவர்கள் மரகதத்திடம், நாங்கள் சென்னை தனிப்பிரிவு போலீஸ் மற்றும் பத்திரிகை நிருபர்கள். உங்கள் வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனையிட வந்துள்ளோம்’ எனக்கூறிக்கொண்டே செல்போனில் வீட்டை புகைப்படம் எடுத்துள்ளனர்.

அப்போது அதில் ஒரு நபர் எங்கள் 4 பேருக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் பணம் கொடுத்தால் இந்த வி‌ஷயத்தை வெளியில் சொல்லமாட்டோம் என கூறி மிரட்டியுள்ளார். அதற்கு மரகதம், ‘அவ்வளவு பணம் என்னிடம் இல்லை’ என கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபர்களுக்கும், அவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் மரகதத்தை தாக்கியுள்ளனர். அப்போது மரகத்தின் தம்பி பழனிசாமியும் உறவினர்கள் ராஜன், மூர்த்தி ஆகிய 2 பேரும் அங்கே ஓடிவந்தார்கள். பின்னர் மரகதம் கும்பலும், பணம் கேட்டு வந்த கும்பலும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டார்கள். இதில் மோட்டார்சைக்கிளில் வந்த 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது. பிறகு இதுபற்றி மரகதம் புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அப்போது 4 பேர் கும்பலில் ஒருவர் மட்டும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கிருந்த மற்ற 3 பேரையும் பிடித்து விசாரித்தபோது அவர்கள் திருப்பூரை சேர்ந்த போலி நிருபர் ராஜபாண்டி, சென்னிமலையை சேர்ந்த நாகராஜன், திருமுருகன்பூண்டியை சேர்ந்த மணிகண்டன், மோகன் ஆகியோர் என்பதும், இதில் தப்பி ஓடியவர் நாகராஜன் என்பதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து ராஜபாண்டி, மணிகண்டன், மோகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய நாகராஜனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்தநிலையில் மரகதம் கும்பலால் தாக்கப்பட்ட ராஜபாண்டி புஞ்சைபுளியம்பட்டி போலீசில் அளித்த தனி புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரகதம், பழனிச்சாமி, ராஜன், மூர்த்தி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மொத்தம் போலி நிருபர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

மேலும் செய்திகள்