சம்பள பாக்கியை வழங்கக்கோரி, தனியார் மில் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை

சம்பள பாக்கியை வழங்கக்கோரி திண்டுக்கல்லில் தனியார் மில் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-26 22:30 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல்லில் இருந்து மாலப்பட்டிக்கு செல்லும் சாலையில் ஒரு தனியார் மில் உள்ளது. இந்த மில்லில் திண்டுக்கல் நகர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மில் திடீரென மூடப்பட்டது.

இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இதற்கிடையே மில்லில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. சம்பளம் கிடைக்காத நிலையில் மில்லும் திறக்கப்படாததால், தொழிலாளர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் அந்த மில்லில் பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் நேற்று திண்டுக்கல்லில் உள்ள அதன் நிர்வாக அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் மில்லின் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பளம் மற்றும் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்