குடிநீர் வழங்கக்கோரி, விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை

குடிநீர் வழங்கக்கோரி விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-27 22:30 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர் 16-வது வார்டு ராஜீவ்காந்தி நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார் பழுதடைந்தது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சரியாக குடிநீர் வினியோகம் செய்ய முடியாததால், அவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் காலி குடங்களுடன் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று குடிநீர் பிடித்து வந்தனர்.

மேலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்யக்கோரி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வாகனம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த குடிநீரை பிடித்து பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக வாகனம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதும் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், நேற்று காலையில் காலி குடங்களுடன் விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த அலுவலக ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க அறிக்கை தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளோம். ஓரிரு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அதுவரை நகராட்சி சார்பில் வாகனம் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையேற்ற பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்