கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது, விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

கோவை அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-06-27 23:00 GMT
சரவணம்பட்டி,

கோவை கணபதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 70). இவர் சரவணம்பட்டி அருகே கீரணத்தம் லட்சுமி கார்டன் பகுதியில் வெண்பன்றி வளர்ப்பு பண்ணை நடத்தி வருகிறார். அங்கு 20 அடி நீளமும், 40 அடி அகலமும், 20 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் தொட்டி உள்ளது.

இதை சுத்தம் செய்வதற்காக நேற்று காலை கோவை கோவில்மேடு பகுதியை சேர்ந்த ராசப்பன் (38), பொன்மாலை என்பவரின் மகன் வேடியப்பன் (29), பெருமாள் என்பவரின் மகன் மற்றொரு வேடியப்பன் (26) ஆகிய 3 தொழிலாளர்கள் சென்றனர்.

அங்கு கழிவுநீர் தொட்டிக்குள் முதலில் ராசப்பன் இறங்கினார். உள்ளே இறங்கியதும் திடீரென்று விஷவாயு தாக்கியதால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வெளியேற முயன்றார். ஆனால் அவரால் வெளியேற முடியாததால் காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டபடி மயங்கி விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற 2 தொழிலாளர்களும், ராசப்பனை காப்பாற்றுவதற்காக தொட்டிக்குள் இறங்கினர். அவர்களையும் விஷவாயு தாக்கியது. இதனால் கண் இமைக்கும் நேரத்தில் 3 பேரும் விஷ வாயு தாக்கி கழிவுநீர் தொட்டிக்குள்ளேயே பரிதாபமாக இறந்தனர்.

இதற்கிடையே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய வந்தவர்களை காண வில்லை என்று சுப்பிரமணியம் தொட்டிக்குள் எட்டிப்பார்த்தார். அதற்குள் 3 பேரும் பிணமாக கிடந்தனர். இது குறித்து அவர் கொடுத்த தகவலின் பேரில் கணபதி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையே விஷவாயு தாக்கி பலியான 3 பேரின் உறவினர்கள் கண்ணீர் மல்க நேற்று மாலை கோவை கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் கோவை மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வெண் பன்றி வளர்ப்பு பண்ணையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற எங்களின் உறவினர்கள் 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இவர்களை இந்த பணிக்கு அழைத்து சென்ற ஒப்பந்ததாரர்கள் மீதும், பண்ணை உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

தமிழ்நாடு மாநில ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் எஸ்.செல்வக்குமார் கூறியதாவது:-

மனித கழிவை மனிதனே அகற்றும் தடை சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. பணியாளர்கள் கண்டிப்பாக பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்றக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து அந்த பணியாளர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் சட்டத்தை மீறி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் அமர்த்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்