பெண்ணை அனுப்பி நெருக்கமாக இருக்க வைத்து, திருப்பூர் தொழில் அதிபர்களை ஆபாச படம் எடுத்து பணம் பறிப்பு? சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு

திருப்பூரில் பெண்ணை அனுப்பி நெருக்கமாக இருக்க வைத்து தொழில் அதிபர்களை ஆபாச படம் எடுத்து பணம் பறிப்பில் கட்சி பிரமுகர் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-06-27 23:00 GMT
திருப்பூர், 

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் திருப்பூர் மாநகரம் திருமுருகன்பூண்டி போலீசில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், எனக்கு திருமணமாகி எனது கணவரை விவாகரத்து செய்து திருப்பூரில் வேலை செய்து வந்தேன். அப்போது அம்மாபாளையத்தை சேர்ந்த தேசிய கட்சி பிரமுகர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. கட்சியில் பதவி கிடைக்கும் என்பதால் தனது தாய், தந்தையிடம் கூறி என்னை வீட்டுக்கு அழைத்துச்செல்வதாக கூறினார். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து 1½ ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்தோம். நான் கர்ப்பமானேன். ஆனால் அந்த கர்ப்பத்தையும் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு என்னை அழைத்துச்சென்று கருக்கலைப்பு செய்து விட்டார். அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

அம்மாபாளையத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு சென்றபோது பெற்றோர் அவரை மறைத்து வைத்து விட்டு தங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டனர். தனது மகனை பார்க்க வேண்டும் என்றால் ரூ.50 லட்சம் வரதட்சணை வேண்டும் என்று கூறினார்கள். எனவே எனது கணவரை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் புகார் மனு ஏற்பு ரசீது கொடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க திருப்பூரில் சமூக வலைதளங்களில் பரவிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், திருமுருகன்பூண்டி போலீசில் பெண் கொடுத்த புகாரில் கூறப்பட்ட கட்சி பிரமுகர், ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு திருப்பூர் மாநகரில் உள்ள முக்கிய தொழில் அதிபர்களை வலையில் வீழ்த்தி அந்த பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும்போது வீடியோ படம் எடுத்து பணம் பறிப்பதாக புகைப்படங்கள், ஆடியோக்கள் வெளியானது. முக்கிய பிரமுகரின் செல்போன் எண்ணுக்கு அந்த பெண் எதேச்சையாக பேசி, பின்னர் தனியாக அழைத்துச்சென்று தனிமையில் இருக்கும்போது, அந்த கட்சி பிரமுகர் வீடியோ, புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பதாக கூறப்பட்டு இருந்தது.

கட்சி பிரமுகர் அந்த பெண்ணுடன் சேர்ந்து திட்டமிட்டு பணம் பறிப்பு வேலையில் ஈடுபட்டு இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் முக்கிய பிரமுகர்களுடன் நெருக்கமாக இருந்த அந்த பெண், சம்பந்தப்பட்ட கட்சி பிரமுகர் மீது போலீசில் புகார் அளித்துள்ளதாகவும், அதே வேளையில் அந்த கட்சி பிரமுகர் அந்த பெண்ணிடம் கட்சி மேலிடத்தில் என்னை பற்றி ஏன் புகார் செய்தாய்? என்று கண்டிப்பது போலவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண் இதுதொடர்பாக எதுவும் புகார் தெரிவிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட கட்சி பிரமுகர் மிகவும் வசதி படைத்தவர். இதனால் அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு பணம் பறிக்க வேண்டுமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் உண்மையாக நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். இந்த விவகாரம் திருப்பூர் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்