சேவூரில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

சேவூர் ஊராட்சியில் முறையாக தண்ணீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-28 22:30 GMT
ஆரணி,

ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சியில் பெரிய ஜெயின் தெரு, வண்ணாரத் தெரு, சின்ன ஜெயின் தெரு, மேட்டுத் தெரு, டேங்க் தெரு, அய்யப்பன் நகர் ஆகிய பகுதிகளுக்கு தொடர்ந்து 2 வாரங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.

ஒரே பகுதிக்கு தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட்டு வருவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் நேற்று ஆரணி - வேலூர் மெயின் ரோட்டில் சேவூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாராணி, பாலாஜி, மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சாலை மறியலை கைவிட்டு ஊராட்சி அலுவலகத்திற்கு வாருங்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறினர்.

இதையடுத்து பொதுமக்கள் சேவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்தனர். ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் எல்.சுரே‌‌ஷ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கே.பெருமாள், கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன், ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) வெங்கடேசன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் கூறுகையில், ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பராமரிப்பாளர் ரவி தினசரி வேலைக்கு வருவதுபோல் வந்து நேற்று மீண்டும் தண்ணீர் வழங்கிய பகுதிக்கே தண்ணீர் கேட் வால்வை திறந்துள்ளார். அதனால் தான் இந்த பிரச்சினை ஏற்பட்டது. இனி அவரை வேலைக்கு வரவிடாமல் பார்த்து கொள்கிறோம். அவருக்கு பதிலாக ஏற்கனவே பணிபுரிந்து வரும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பராமரிப்பாளர்கள் ஏழுமலை, தேவா ஆகியோரில் ஒருவரை நிரந்தரமாக நியமனம் செய்து உங்கள் பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறோம். மேலும் இப்பகுதிகளில் முறையாக தண்ணீர் வழங்க கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது அதில் இருந்தும் 2 நாட்களில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

அதைத்தொடர்ந்து ஊராட்சி அலுவலகம் முன்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்