அரசின் திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - கலெக்டர் பேச்சு

அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்துகொண்டு அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பெத்துரெட்டிபட்டி கிராமத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சிவஞானம் கூறினார்.

Update: 2019-06-28 22:15 GMT
விருதுநகர், 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெத்துரெட்டிபட்டி கிராமத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சிவஞானம் பார்வையாளராக கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் பெத்துரெட்டிபட்டி கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் முடிய ஊராட்சி நிர்வாகத்தின் பொது செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் 2019-20ம் நிதியாண்டில் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட இருக்கும் வளர்ச்சி பணிகளுக்கான திட்ட அறிக்கை, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், தமிழக அரசின் பசுமை வீடு திட்டம், முழு சுகாதாரம் தமிழகம், முன்னோடி தமிழகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், அந்தியோதயா இயக்கம், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினம் விவரம், மகளிர் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் உள்ளிட்ட திட்டப்பணிகள் மற்றும் ஊராட்சிகளின் வரவு செலவு திட்ட அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் கூட்டத்தில் கலெக்டர் சிவஞானம் பேசியதாவது:-

ஒவ்வொரு கிராமத்திலும் நடக்கும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் கலந்துகொண்டு கிராமத்திற்கான அடிப்படை முக்கிய தேவைகள் என்ன என்பதை தெரிந்துகொண்டு, இதுவரை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், கிராமத்திற்கு அரசு ஒதுக்கிய நிதியை என்னென்ன பணிகளுக்கு செலவிடலாம் என்பதையும், அரசு ஒதுக்கீடு செய்த நிதியிலிருந்து அரசு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதையும் கிராம மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அரசு திட்டங்கள் கிராமத்தில் தங்களின் பங்களிப்போடு செயல்படுவதையும் கிராம மக்கள் உறுதி செய்ய வேண்டும். அரசு திட்டங்கள் அனைத்தும் மக்களுக்காக செயல்படுத்தப்படுகிறது. என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பது அந்தந்த கிராம மக்களுக்கு தான் தெரியும். எனவே அரசிடம் கிராமத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்து தெரியப்படுத்தும் கடமையும் மக்களுக்கு உள்ளது.

மத்திய-மாநில அரசுகள் மூலமாக பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே கிராம மக்கள் அனைவரும் ஏற்கனவே அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தையும் தெளிவாக தெரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும். அந்த திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதற்காக தான் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கும் அரசு அலுவலங்களுக்கு நேரில் செல்லாமலே அந்ததந்த கிராமங்களின் அருகில் உள்ள பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், திட்ட இயக்குனர் தெய்வேந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் அருணாசலம், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) வீராச்சாமி, சாத்தூர் கோட்டாட்சியர் காளிமுத்து, சமூக நல அலுவலர் ராஜம், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சிவசங்கரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பத்மாசனி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் லட்சுமி பிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்