21,868 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை, ஆரணியில் 21,868 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.

Update: 2019-06-29 23:30 GMT
ஆரணி, 

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் ஆரணி, மேற்கு ஆரணி, பெரணமல்லூர், போளூர், சேத்துப்பட்டு, ஜவ்வாதுமலை ஆகிய 6 வட்டாரங்களில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் 46 மேல்நிலைப்பள்ளியில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். தூசி கே.மோகன் எம்.எல்.ஏ, உதவி கலெக்டர் இல.மைதிலி, ஆரணி மாவட்டக்கல்வி அலுவலர் த.சம்பத், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முதன்மைக்கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு முதல் கட்டமாக 6 வட்டாரங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு நிதியதவி பெறும் 46 மேல்நிலைப்பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் 11 ஆயிரத்து 528 மாணவ-மாணவிகளுக்கு ரூ.14 கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினார்.

விழாவில் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி தலைவர் சத்தியமூர்த்தி, தாளாளர் பூபதி, செயற்குழு உறுப்பினர் பி.டி.எஸ்.ஜோதிசெல்வராஜ், வேலூர் ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, அரசு வக்கீல் கே.சங்கர், மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கஜேந்திரன், வைகை கூட்டுறவு சங்கத் தலைவர் பி.ஆர்.ஜி.சேகர், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் அசோக்குமார், பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் ஜோதிலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமைஆசிரியை மகேஸ்வரி நன்றி கூறினார்.*

திருவண்ணாமலை டேனி‌‌ஷ் மி‌‌ஷன் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை கல்வி மாவட்ட அலுவலர் அருள்செல்வன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமசந்திரன் கலந்து கொண்டு 10 ஆயிரத்து 340 மாணவ-மாணவிகளுக்கு ரூ.12 கோடியே 69 லட்சத்து 2 ஆயிரத்து 820 மதிப்பிலான மடிக்கணினிகள் வழங்கி பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிரு‌‌ஷ்ணமூர்த்தி உடனிருந்தார்.

விழாவில் செங்கம் கல்வி மாவட்ட அலுவலர் வெங்கட்ராம், பள்ளி துணை ஆய்வாளர்கள் குமார், வெங்கடகிரு‌‌ஷ்ணன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் டேனி‌‌ஷ் மி‌‌ஷன் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கியூபட்தனசுந்தரம் நன்றி கூறினார்.

இந்த நிலையில் மடிக்கணினி வழங்கப்படுவதை அறிந்த முன்னாள் மாணவர்கள் தங்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்று நேற்று காலை கையில் கோரிக்கை அட்டையை சுமந்தவாறு டேனி‌‌ஷ் மி‌‌ஷன் மேல்நிலைப்பள்ளி அருகில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டினர். பின்னர் அவர்கள் பெரியார் சிலை அருகில் கூடினர். அங்கு வந்த போலீசார் அவர்களை விரட்டினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

முன்னாள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர்களிடம் நிருபர்கள் பேட்டி எடுக்க சென்றனர். அப்போது அங்கிருந்த திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெறுவதற்கு செய்தியாளர்கள் காரணம், நீங்கள் முதலில் இங்கிருந்து செல்லுங்கள் என்று ஒருமையில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செய்தியாளர்கள் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற டேனி‌‌ஷ்மி‌‌ஷன் பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

இதேபோல் ஆரணியில் விழா நடைபெறுவதற்கு முன்பு 2017-18-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்களுக்கு மடிக்கணினி கிடைக்கவில்லை என்று கூறி பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்து வந்த போலீசார் மாணவர்களை வகுப்பறைகளுக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர். பின்னர் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது முதல்கட்டமாக தற்போது படிக்கும் மாணவர்களுக்கே மடிக்கணினி வழங்கப்படுகிறது. உங்களுக்கு ஒருமாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என்றனர். இதனை ஏற்காத மாணவர்கள் எங்களுக்கு எழுதி கொடுக்குமாறு கோரினர். இதையடுத்து கலெக்டர் அவர்கள் கொண்டு வந்த மனுவிலேயே எழுதி கொடுத்த்தார். அதைத்தொடர்ந்து மாணவர்கள் சமரசம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்