வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதால் இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு அரசு வேலை மறுக்கப்படுவதால் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2019-07-01 23:00 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றார். மொத்தம் 1,092 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. இதில் சுமார் 1,029 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாங்கள் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர்கள். இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரம் காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட தன் விளைவாக அனைவரும் அணிந்திருந்த ஆடைகளுடன் எல்லா உடைமைகளையும் விட்டு விட்டு 1990-ம் ஆண்டு படகு மூலமாக இந்திய நாட்டிற்கு வந்தோம். மேலும் நாங்கள் இந்த நாட்டிற்கு வந்து 30 வருடங்கள் ஆகி விட்டது. 3-வது தலைமுறை பிள்ளைகளும் வந்து விட்டனர். இதுவரை எங்களுக்கான எந்த ஒரு நிரந்தரமான தீர்வு அரசால் ஏற்படுத்தவில்லை. கல்லூரி நிறைவு செய்து இருந்தாலும் எங்களது மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனவே எங்களது வாழ்வாதாரம் குறித்தும், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் கேள்விக்குறியாக உள்ளது. எங்களுக்கு இந்தியக் குடியுரிமையை பெறுவதற்கு ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கூட்டத்தில் ஆரணி சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் கமண்டலநாகநதி தெருவில் ஒரு வீட்டின் பின் பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் எங்கள் பகுதியில் குழந்தைகள் உள்பட அனைவருக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மனுவை பரிசீலனை செய்து செல்போன் கோபுரத்தை அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

செங்கம் மேல்புழுதியூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து சைக்கிளில் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளுடன் செங்கத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார்.

முகாமின்போது தசைச்சிதைவு நோய் மற்றும் பக்கவாதத்தால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2 கால்களும், 2 கைகளும் செயல் இழந்த மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பேட்டரியால் இயங்கும் ரூ.74 ஆயிரத்து 500 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகளையும், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 17 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கிறிஸ்டினா தா.டார்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்