மாவட்ட செய்திகள்
எம்.ஜி.ஆர். சென்டிரல்-பூங்கா நகர் ரெயில் நிலையம் இடையே சுரங்கப்பாதையை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சாலையை கடந்து பூங்கா ரெயில் நிலையம் செல்வதை தவிர்க்க அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,

சென்னை பூங்காநகர் மற்றும் பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து வரும் பயணிகள் எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் செல்வதற்கு சாலையை கடந்து செல்கின்றனர். தற்போது சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தானியங்கி நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய சுரங்கப்பாதையை அமைத்துள்ளது. இதனால் பூங்கா ரெயில் நிலையம், சென்டிரல் புறநகர் ரெயில் நிலையம் செல்லும் பயணிகளுக்கு எளிதாக உள்ளது.

இருந்த போதிலும் பூங்காநகர் ரெயில் நிலையதில் இருந்து சென்டிரல் வரும் பயணிகள், பூங்காநகரில் இருந்து சாலை வழியாக செல்கின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பும், சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுகிறது.

இந்தநிலையில் ரெயில் நிலையம் வரும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி ரெயில்வே நிர்வாகமும், தமிழ்நாடு போக்குவரத்து காவல் துறையும், மெட்ரோ ரெயில் நிர்வாகத்துடன் இணைந்து பொது மக்களின் பயன்பாட்டுக்கு சுரங்கப்பாதைகளை கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.

இதுகுறித்து எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலைய இயக்குனர் குகனேசன் கூறியதாவது:-

ரெயில் நிலையங்கள் மற்றும் சாலைகளில் சுரங்கப்பாதை மற்றும் நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் அதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. இதற்காக சுரங்கப்பாதைகளை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தற்போது சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து பூங்கா ரெயில் நிலையம் செல்வதற்கு மெட்ரோ ரெயில் நிர்வாகம் சுரங்கப்பாதையை திறந்துள்ளது. சென்டிரல் புறநகர் ரெயில் நிலையத்தில் இருந்து, சுரங்கப்பாதைக்கு செல்வதற்கு புதிதாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த பாதையை பயன்படுத்தி மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை வழியே மறுமுனைக்கு எளிதாக எந்த இடையூறும் இல்லாமல் சுலபமாக சென்றுவிடலாம். பிறகு அங்கிருந்து பூங்காநகர் மற்றும் பூங்கா ரெயில் நிலையம் செல்வதற்கு புதிதாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து சுரங்கப்பாதை வழியாக பூங்காநகர் ரெயில் நிலையம் சென்றுவிடலாம். இவ்வாறு எப்போது மக்கள் அனைவரும் விபத்தை தவிர்க்கவும், போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கவும் சுரங்கப்பாதைகளை பயன்படுத்த முன்வர வேண்டும். மேலும் பூங்காநகர் ரெயில் நிலையத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக பல்லவன் சாலைக்கு செல்லும் வழியை பாதுகாப்பு கருதி நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.