இரவுசேரி மேல கண்மாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் வருவாய் துறை நடவடிக்கை

தேவகோட்டை அருகே இரவுசேரி மேல கண்மாயில் ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் அகற்றினர்.

Update: 2019-07-01 22:30 GMT
தேவகோட்டை,

கண்மாய் குளங்கள் வரத்துக்கால் நீர்ப்பிடிப்பு பகுதி போன்ற நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவைத் தொடர்ந்து முக்கிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு, பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உடனடியாக ஆய்வு நடைபெற்று வருகிறது.

அவ்வாறு ஆய்வு பணியின் போது, ஆக்கிரமிப்புகள் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக வருவாய்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். ஐகோர்ட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கலெக்டர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக தேவகோட்டை அருகே உள்ள இரவுசேரி மேல கண்மாயில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கோழிப்பண்ணைகள் வைத்திருப்பதாக கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, தேவகோட்டை தாசில்தார் மேசியாதாஸ், துணை தாசில்தார் நேரு, வருவாய் ஆய்வாளர் ராஜாமணி, கிராம நிர்வாக அலுவலர் அருணாச்சலம் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கண்மாயில் போடப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு குடிசைகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. இதுபோல பொதுமக்களால் கொடுக்கப்படும் புகார் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை செய்து, தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்