நீடாமங்கலத்தில் ஆன்லைன் மூலம் தபால் அலுவலக சேவை தஞ்சை முதுநிலை கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்

நீடாமங்கலத்தில் ஆன்லைன் மூலம் தபால் அலுவலக சேவையை தஞ்சை முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.

Update: 2019-07-01 22:45 GMT
நீடாமங்கலம்,

நீடாமங்கலம் பஜார் கிளை தபால் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் தபால் அலுவலக சேவை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த புதிய சேவையை தஞ்சை முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி கண்காணிப்பாளர்கள் பிரேம் ஆனந்த்(மன்னார்குடி), கார்த்திகேயன்(தஞ்சாவூர்), நீடாமங்கலம் தபால் நிலைய அதிகாரி காமராஜ், பஜார் கிளை தபால் நிலைய அதிகாரி உஷாராணி மற்றும் தபால் அலுவலக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். புதிதாக கணக்கு தொடங்கியவர்களுக்கு உடனடியாக பாஸ் புத்தகம் வழங்கப் பட்டது.

பின்னர் தஞ்சாவூர் முதுநிலை தபால் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது-

294 தபால் அலுவலகங்களிலும்...

பிரதமர் நரேந்திரமோடியால் 1.7.2015-ல் டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. டிஜிட்டல் இந்தியாவின் ஒருபகுதியாக தபால் துறையில், தலைமை மற்றும் துணை தபால் அலுவலகங்களிலும் இந்த திட்டம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட 294 கிளை தபால் அலுவலகங்களிலும் டர்பான் (டிஜிட்டல் அட்வான்ஸ்மென்ட் ஆப் ரூரல் போஸ்ட் ஆபீஸ் பார் நியூ இந்தியா) கருவி வழங்கப்பட்டு அதன் மூலம் அனைத்து பரிவர்த்தனைகளும் நடந்து வருகிறது. பதிவு தபால், விரைவு தபால் இ-மணியார்டர் போன்ற அனைத்து சேவைகளும் இக்கருவி மூலம் வழங்கப் படுகிறது.

அனைத்து பரிவர்த்தனைகளும்...

குறிப்பாக இ-மணியார்டர் கிளை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டவுடன் அந்த விபரம் உடனடியாக பணம் பெறுபவரது தபால் அலுவலகத்திற்கு நேரடியாக சென்றடைகிறது. இதன் மூலம் விரைவாக பெறுபவருக்கு தபால் காரர் மூலம் கிடைக்கிறது.

மேலும் சேமிப்பு வங்கி கணக்கு பரிவர்த்தனைகள், கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பிரிமிய தொகை செலுத்துதல் போன்ற சேவைகளும் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து பரிவர்த்தனைகளும் உடனடியாக சென்ட்ரல் சர்வரை சென்றடைகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்