அபராத தொகையை ரத்து செய்யக்கோரி மின்பொறியாளர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்

முறைகேடாக மின்சாரத்தை பயன்படுத்தியதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி கோணலூர் இளநிலை மின்பொறியாளர் அலுவலகத்தின் முன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-02 23:14 GMT
வேட்டவலம்,

வேட்டவலம் அருகே பொலக்குணம் கிராமத்தில் வசிக்கும் பாஸ்கரன் என்பவர் பூந்தோட்டம் அமைத்து அதற்கு மின் இணைப்பு பெற்று நீர் பாய்ச்சி வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் மின் திருட்டு தடுப்பு குழுவினர் ஆய்வு செய்தபோது கிணற்றுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை பயன்படுத்தி பூந்தோட்டத்திற்கு முறைகேடாக நீர் இறைத்ததாக பாஸ்கரனுக்கு அபராதமாக ரூ.98 ஆயிரம் விதிக்கப்பட்டது.

அதே போல் அந்த பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த அபராத தொகையை ரத்து செய்யக் கோரியும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் வழங்கக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பலராமன் தலைமையில் விவசாயிகள் நேற்று கோணலூரில் உள்ள இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது கோணலூர் இளநிலை மின்பொறியாளர் அலுவலகத்திற்கு வந்திருந்த விஜிலென்ஸ் ஆய்வு மேற்கொண்ட தருமபுரி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அமலாக்கம் சைலேந்திரகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் அபராத தொகையை ரத்து செய்ய ஆவண செய்ய வேண்டும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை வறட்சியை கருத்தில் கொண்டு உடனடியாக வழங்கப்படவேண்டும் என்று பலராமன் வலியுறுத்தினார்.

மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அவர் கூறினார். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படவில்லை என்றால் மாவட்ட மின்வாரிய அலுவலகத்தின் எதிரே தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் பலராமன் கூறினார்.

மேலும் செய்திகள்