‘உல்லாசத்திற்கு வரமறுத்ததால் கள்ளக்காதலியை கொன்றேன்’ கைதான கட்டிட தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்

‘உல்லாசத்திற்கு வரமறுத்ததால் கள்ளக்காதலியை கொன்றேன்‘ என்று கைதான கட்டிட தொழிலாளி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Update: 2019-07-03 23:15 GMT

கொண்டலாம்பட்டி,

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மனைவி முனியம்மாள்(வயது 45), கட்டிட தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். வேலைக்கு செல்லும் போது முனியம்மாளுக்கும், அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான செந்தில்குமார்(35) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

பின்னர் அவர்கள் இருவரும் வண்ணார் கொண்டலாம்பட்டி பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கினர். குடும்ப பிரச்சினை காரணமாக அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 29–ந் தேதி மீண்டும் அவர்களிடயே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த செந்தில்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து முனியம்மாளின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அவருடைய உடலை அருகில் உள்ள தண்டவாளத்தில் வீசிவிட்டு தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதனிடையே தலைமறைவான செந்தில்குமாரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் செந்தில்குமாரை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுபற்றி போலீசார் கூறியதாவது:–

முனியம்மாள் வேலைக்கு செல்லும் இடத்தில் சிலருடன் பேசுவதால் அவர் மீது செந்தில்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி உள்ளார். ஆனால் முனியம்மாள் இதற்கு மறுப்பு தெரிவித்து வேலைக்கு தொடர்ந்து செல்வேன் என்று கூறினார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் சம்பவத்தன்று செந்தில்குமார், முனியம்மாளை உல்லாசத்துக்கு அழைத்து உள்ளார். இதற்கு அவர், உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்பதால் உல்லாசத்திற்கு வரமாட்டேன் என மறுத்து தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் கள்ளக்காதலியை அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்து அருகில் உள்ள தண்டவாளத்தில் வீசினேன் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்