தண்ணீர் குடம் சுமந்து சென்றவர் மீது மொபட் மோதல்: ‘லிப்ட்’ கேட்டு வந்த பெண் கீழே விழுந்து பலி

தண்ணீர் குடம் சுமந்து சென்றவர் மீது மொபட் மோதியதில் ‘லிப்ட்’ கேட்டு வந்த பெண் கீழே விழுந்து பலியானார்.

Update: 2019-07-03 22:15 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதி. இவரது மனைவி லெட்சுமி(வயது 55). இவர் பெரம்பலூர் செல்வதற்காக நேற்று அதிகாலை தனது ஊரில் இருந்து நடந்து வந்தார். அப்போது பெரம்பலூர் உழவர் சந்தைக்கு செல்வதற்காக அந்த வழியாக மொபட்டில் வந்த குரும்பலூர் அண்ணா நகரை சேர்ந்த ஆறுமுகம்(40) என்பவரை லெட்சுமி லிப்ட் கேட்டு வழிமறித்தார். இதனை கண்ட ஆறுமுகம் மொபட்டை நிறுத்தி, லெட்சுமியை பின்னால் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். மொபட் செஞ்சேரி மெயின் ரோட்டில் காலனி தெரு முன்பு சென்று கொண்டிருந்தபோது, அந்த சாலையில் தண்ணீர் குடத்தை இடுப்பில் சுமந்தவாறு நடந்து சென்று கொண்டிருந்த செஞ்சேரி இந்திரா நகரை சேர்ந்த சின்ராசு மனைவி லெட்சுமி(38) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மொபட் மோதியது.

பலி

இதில் மொபட்டில் பின்னால் அமர்ந்திருந்த ஜோதி மனைவி லெட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் ஆறுமுகத்திற்கும், சின்ராசு மனைவி லெட்சுமிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் போலீசார் இறந்த லெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்