கடலோர பகுதிகளில் சூறாவளி: சேதுபாவாசத்திரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

கடலோர பகுதிகளில் சூறாவளி வீசியதால் சேதுபாவாசத்திரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2019-07-03 23:00 GMT
சேதுபாவாசத்திரம்,

கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் 15-ந் தேதி தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட கடலோர பகுதிகளை கஜா புயல் சூறையாடியது. சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய 2 இடங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விசைப்படகுகள் புயலில் கடுமையாக சேதம் அடைந்தன.

புயலின்போது துறைமுகங்களில் நிறுத்தப்பட்டு இருந்த 188 விசைப்படகுகள் சுக்கு நூறாக உடைந்ததாகவும், 58 படகுகள் பகுதி அளவு சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. சேதம் அடைந்த படகுகளுக்கு அரசு வழங்கிய நிவாரண தொகை மிகவும் குறைவு என்பதால், பெரும்பாலான மீனவர்கள் புதிய படகுகளை வாங்க முடியாமல் சிரமத்தில் உள்ளனர்.

புயலுக்கு முன்பு 2 துறைமுகங்களிலும் 246 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 110 படகுகளே உள்ளன. மீன்பிடி தடைக்காலத்துக்கு பிறகு மீன் வருவாய் இன்றி மீன்பிடி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடலோர பகுதிகளில் கடுமையான சூறாவளி காற்று வீசிவருகிறது.

இதன் காரணமாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. அடிக்கடி ராட்சத அலைகள் எழுகின்றன. இதனால் சேதுபாவாசத்திரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று வந்த 52 விசைப்படகுகள் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கடலில் சூறைக்காற்று வீசி வந்தாலும் மீன்வளத்துறை வழக்கம் போல் விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கி உள்ளது. இதனால் கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் மல்லிப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

இங்கிருந்து 25 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளன. 

மேலும் செய்திகள்