தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில், தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை - பா.ம.க. நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய வேன் சிக்கியது

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் பா.ம.க. நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய வேன் சிக்கியது.

Update: 2019-07-03 22:30 GMT
தேனி,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தூண்டில் விநாயகம் பேட்டையை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் திருவிடைமருதூர் நகர பா.ம.க. முன்னாள் செயலாளர் ஆவார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி ராமலிங்கம், ஒரு கும்பலை சேர்ந்தவர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 10-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

இந்த படுகொலை தொடர்பான வழக்கை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தினர். மத்திய அரசிடமும் வலியுறுத்தினர்.

இதையடுத்து இந்த கொலை வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி ஒப்படைக்கப்பட்டது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்தபடி தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணையை தொடங்கினர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்பேரில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றுவதற்காக தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தேனிக்கு தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் 2 பேர் நேற்று முன்தினம் வந்தனர். அவர்கள் தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள ஒரு மத வகுப்பு எடுக்கும் பள்ளிக்கு சென்றனர். அங்கு அவர்கள் சோதனை நடத்தினர்.

அப்போது அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு வேன், இந்த கொலை வழக்கில் தொடர்புடையது என்று தெரியவந்தது. அந்த வேன் சென்னை பதிவு எண்ணை கொண்டது. இதையடுத்து அந்த வேனை தேசிய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்