சேதுபாவாசத்திரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

சேதுபாவாசத்திரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை கடலோர காவல்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டதுடன் கஞ்சா கடத்தி வரப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-07-04 22:30 GMT
சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மற்றும் நாகை கடல் பகுதி வழியாக வெளிநாடுகளுக்கு தங்கம், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. இதை தடுக்க சுங்கத்துறை மற்றும் கடலோர காவல் படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் திருச்சியில் இருந்து தஞ்சை மாவட்ட கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட இருப்பதாக கடலோர காவல்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேதுபாவாசத்திரம் கடலோர காவல்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், ஏட்டு வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பிள்ளையார் திடல் பழைய சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து கட்டுமாவடி நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரை வழிமறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது காரில் 50 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடலோர காவல் படை போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் வந்தவர்கள் மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த சேகர்(வயது 59), புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த கலந்தர் கனி (30), ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன்(45) ஆகியோர் என்பதும், இவர்கள் 3 பேரும் இலங்கைக்கு கஞ்சாவை படகில் கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகர், கலந்தர் கனி, விஸ்வநாதன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்ட கார் பறிமுதல் செய்யப் பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்