மணக்கால் அய்யம்பேட்டை அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் கல்வி சீர்வரிசை பொருட்கள் கிராம மக்கள் வழங்கினர்

மணக்கால் அய்யம்பேட்டை அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் கல்வி சீர்வரிசை பொருட்களை கிராம மக்கள் வழங்கினர்.

Update: 2019-07-06 22:45 GMT
கொரடாச்சேரி,

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்ற பரவலான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் தங்களது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அரசு பள்ளிகளுக்கு கல்வி உதவி உபகரணங்களை சீர்வரிசையாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.அந்த வகையில் திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், மணக்கால் அய்யம்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் எழுது பொருட்கள், நாற்காலிகள், மேஜைகள், பீரோக்கள், தொலைக்காட்சி பெட்டிகள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான கல்வி பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.

இந்த சீாவரிசை பொருட்களை ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். மேலும் 106 ஆண்டுகள் கடந்து வந்த இந்த பள்ளி தற்போது 107-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த ஆண்டில் 85 மாணவர்கள் பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பரிவட்டம் கட்டி மாணவர்களை வரவேற்றனர்.

இதில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் திட்ட அலுவலர் கலை வாணன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஈவேரா, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் ரவி, பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன், வட்டார கல்வி அலுவலர்கள் கிருபா, மணிவண்ணன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரபு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமகிருஷ்ணன், நிர்வாகி நாராயணசாமி மற்றும் ஆசிரியர்கள் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை கலைவாணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்