மதுகுடிக்க பணம் கொடுக்காததால், கல்லால் தாக்கி வியாபாரி கொலை - சிறுவன் கைது

மதுகுடிக்க பணம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த சிறுவன், வியாபாரியை கல்லால் தாக்கி கொலை செய்தான். இது தொடர்பாக அவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-07-07 23:00 GMT
போத்தனூர்,

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள மைல்கல் இட்டேரி கிழக்கு வீதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 58). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சர்க்கரை ஆலையில் வேலை செய்தபோது எந்திரத்தில் கை சிக்கியதில் அவரது இடது கை துண்டானது. இதன்பின்னர் அவர் ரெயில்களில் பேனா, பென்சில் விற்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், மணிகண்டன் (18), ராஜலட்சுமி (15) என்ற மகளும் உள்ளனர். லோகநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்தார்.

இந்தநிலையில் மைல்கல் பகுதியில் உள்ள ஒரு பூங்கா அருகே ரோட்டில் தலையில் ரத்த காயத்துடன் வியாபாரி லோகநாதன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அந்த வழியாக வந்தவர்கள் இதனை பார்த்து, அவருடைய மகன் மணிகண்டனுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அவரது மகன் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனது தந்தை லோகநாதனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி லோகநாதன் நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்த குனியமுத்தூர் இன்ஸ்பெக்டர் கணேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். லோகநாதனின் மகன் மணிகண்டனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது லோகநாதனின் உருவம் மட்டும் பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து கொலை நடைபெற்ற பகுதியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, லோகநாதனை தாக்கியவர் குறித்து ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி சுகுணாபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். கைதான சிறுவன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

நான் பூ மார்க்கெட்டில் பூ கட்டும் வேலை செய்து வருகிறேன். சுகுணாபுரம் பகுதியில் மதுபோதையில் வந்து கொண்டிருந்தபோது, லோகநாதனிடம் மதுகுடிக்க பணம் கேட்டேன். அவர் தரமுடியாது என்று கூறினார். அவரது சட்டைப்பையில் கைவிட்டு பணத்தை எடுக்க முயற்சித்தேன். லோகநாதன் என்னை பிடித்து கீழே தள்ளினார். இதில் நான் கீழே விழுந்துவிட்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அங்கு கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் அடித்து கொலை செய்தேன். இவ்வாறு வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதனைதொடர்ந்து குனியமுத்தூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். 17 வயது என்பதால் சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

மதுபோதைக்கு அடிமையான சிறுவன், வியாபாரியை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்