சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்தனர்

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு கொடுத்தனர்.

Update: 2019-07-08 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். புதுக்கோட்டை மாவட்ட வீரசைவ பேரவையினர் அளித்த மனுவில், வராப்பூர்- பொன்னாங்கன்னிப்பட்டி சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை தனி ஒருவர் ஆக்கிரமித்து சுவர் கட்டி வருகிறார். ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி நாங்கள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து பல்வேறு போராட்டம் நடத்தியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சுடுகாட்டு பாதையில் சுவர் எழுப்புவதை தடை செய்ய வேண்டும். மேலும் சுடுகாட்டை சீர் செய்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஊதியம்

தமிழ்நாடு அரசு மருத்துவ மனை உதவி பணி தொழிலாளர்கள் சங்கத்தினர் அளித்த மனுவில், நாங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் தோட்டவேலை, துப்புரவு, பாதுகாவலர், எலக்ட்ரீசியன், பிளம்பர் உள்ளிட்ட உதவி பணிகள் செய்ய தனியார் ஒப்பந்த நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்டு பணியாற்றி வருகிறோம். புதுக்கோட்டையில் 350 பேர் பணியாற்றி வருகிறோம். நாங்கள் இரவு பகல் பாராமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாத சம்பளம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பெரியார் சிலையை சீர்செய்ய வேண்டும்

புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் அளித்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கத்தின்போது, புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை, சேதமடைந்தது. மேலும் பெரியார் சிலை அமைந்துள்ள கீழ் பகுதியில் இரும்பு கதவும் சேதமடைந்து உள்ளது. பகுத்தறிவு பகலவன் பெரியார் சிலையை சரிசெய்து பராமரிக்க போதிய நிதியை ஒதுக்கி தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்

ஆலங்குடியை சேர்ந்த மணி என்பவர் அளித்த மனுவில், அறந்தாங்கி-புதுக்கோட்டை, புதுக்கோட்டை-அறந்தாங்கிக்கு 2 டவுன் பஸ் இயக்கப்பட்டது. இது டவுன் பஸ்கள் பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தன. இந்நிலையில் இந்த 2 பஸ்சும் நிறுத்தப்பட்டது. இதனால் அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டைக்கும், புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கிக்கும் வரும் பொதுமக்கள், மாணவர்கள் மிகுந்த பாதிப்படைந்து வருகின்றனர். எனவே இந்த பஸ்களை மீண்டும் வழக்கம்போல் இயக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்