மாநகராட்சி மைய அலுவலகத்தை தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தை தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகள் நேற்று முற்றுகையிட்டனர். விற்பனைக்கான புதிய இடத்தை 30 நாட்களில் குழு தேர்வு செய்யும் என முடிவெடுக்கப்பட்டது.

Update: 2019-07-08 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாநகரை ‘ஸ்மார்ட் சிட்டி’ ஆக்கும் வகையில் முதல் கட்டமாக சாலையோர தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு என கருதி அவற்றை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் தரப்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இன்னொரு புறம் பெரும் வணிகர்கள் தரப்பில், சாலையோர கடைகளை அப்புறப்படுத்தி அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறது. ஏற்கனவே கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு, அது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை 10 மணிக்கு திருச்சி மாநகராட்சி பகுதி சாலையோர தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகள் ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தக்கோரி திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முற்றுகை காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு அதிகாரிகள், ஊழியர்களை தவிர மற்றவர்கள் யாரும் உள்ளே செல்லமுடியாத வகையில் இரு நுழைவுவாயில் இரும்பு கதவுகளும் மூடப்பட்டன.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட குறிப்பிட்ட நபர்களை மட்டும் மாநகராட்சி நகர பொறியாளர் அமுதவல்லி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதைத்தொடர்ந்து மாவட்ட தள்ளுவண்டி, தரைக்கடை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம்(சி.ஐ.டி.யூ) தரப்பில் செல்வி, கணேசன், வெற்றிச்செல்வன், சேகர், ஷேக்மைதீன் உள்ளிட்டவர்கள் சென்றனர்.

அப்போது தரைக்கடை வியாபாரிகள் தரப்பில், திருச்சி மாநகரில் சாலையோரத்தில் பல ஆண்டுகளாக தள்ளுவண்டி, தலைச்சுமை, சைக்கிள், இரண்டு சக்கர தள்ளுவண்டிகளில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகிறோம். பல மாநகராட்சி மற்றும் மாவட்டங்களில் விற்பனைக்குழு அமைத்து முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், திருச்சி மாநகரில் அதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. ஏற்கனவே, கடந்த பிப்ரவரி மாதம் மதுரை ஐகோர்ட்டு கிளை 2 மாதத்திற்குள் அடையாள அட்டை வழங்கி விற்பனைக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க தீர்ப்பு வழங்கி உள்ளது என்பதை சுட்டிக்காட்டினர்.

நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பின் போலீசார், வியாபாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு, இன்னும் 1 மாதத்தில் தரைக்கடை, தள்ளுவண்டி கடை வியாபாரிகளுக்கான புதிய விற்பனை இடத்தை அக்குழு தேர்வு செய்யும் என்றும், அதுவரை தரைக்கடை வியாபாரிகளுக்கு தொந்தரவு இருக்காது என்ற உத்தரவாதத்தை மாநகராட்சி நிர்வாகம் அளித்ததாக பேச்சுவார்த்தையில் பங்கேற்ற வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னரே, முற்றுகை போராட்டத்தை கைவிட்டு வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்