நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: சென்னை மெட்ரோ ரெயிலில் தினமும் 1 லட்சம் பேர் பயணம், கூடுதல் வசதிகளுக்கு ஏற்பாடு

சென்னையில் மெட்ரோ ரெயிலில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும் 1 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இவர்களுக்கு பல்வேறு கூடுதல் வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளன.

Update: 2019-07-10 23:45 GMT
சென்னை,

சென்னை மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், குளிர்சாதன வசதியுடன் விரைவாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணம் செய்வதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

முதல்கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டை-வண்ணாரப்பேட்டை வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

இதில் கடைசியாக டி.எம்.எஸ்.-வண்ணாரப்பேட்டை இடையே கடந்த பிப்ரவரி 10-ந்தேதியில் இருந்து ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது. நாளுக்குநாள் மெட்ரோ ரெயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. பொதுமக்கள் மத்தியில் மெட்ரோ ரெயிலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் சென்னையில் 2-வது கட்டமாக 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வழித்தட பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து வருகிறது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

மெட்ரோ ரெயிலில் கடந்த மார்ச் மாதம் 23 லட்சத்து 88 ஆயிரம் பேரும், ஏப்ரல் மாதம் 24 லட்சத்து 30 ஆயிரம் பேரும், மே மாதம் 24 லட்சத்து 49 ஆயிரம் பேரும், கடந்த ஜூன் மாதம் 24 லட்சத்து 95 ஆயிரத்து 461 பேரும் பயணம் செய்து உள்ளனர். குறிப்பாக கடந்த திங்கட்கிழமை 1 லட்சத்து 2 ஆயிரம் பேரும், கடந்த 9-ந்தேதி 75 ஆயிரம் பேரும் பயணம் செய்து உள்ளனர்.

சராசரியாக ஒரு நாளைக்கு 90 ஆயிரத்தில் இருந்து 92 ஆயிரம் பேர் வரை பயணம் செய்கின்றனர். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 50 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் வரை பேர் பயணம் செய்கின்றனர்.

மெட்ரோ ரெயில் நிலையங்களிலேயே சென்னை விமான நிலையத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில் மட்டும் தினமும் 9 ஆயிரம் பயணிகள் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்கின்றனர். இதனைதொடர்ந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் 8 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரத்து 500 பேர் வரை பயணம் செய்கின்றனர்.

அதேபோல் திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் தினமும் 7 ஆயிரத்து 300-ல் இருந்து 7 ஆயிரத்து 500 பேர் வரை பயணம் செய்கின்றனர். திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அலுவலகம் செல்லும் பெரும்பாலானவர்கள்தான் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர்.

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பயணிகள் நலன் கருதி ஷேர் டாக்சி மற்றும் ஷேர் ஆட்டோ வசதிகள் குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் மட்டும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் டாக்சி சேவையை கூடுதல் ரெயில் நிலையங்களில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் வாடகைக்கு விடும் திட்டமும் தேர்வு செய்யப்பட்ட ரெயில் நிலையங்கள் தவிர, கூடுதலான எண்ணிக்கையிலான ரெயில் நிலையங்களிலும் கொண்டு வருவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர பயணிகளுக்கு கூடுதலான வசதிகளும் மேம்படுத்துவது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்