மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 56 வாகனங்கள் ஏலம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட 56 வாகனங்கள் வருகிற 30-ந் தேதி ஏலம் விடப்படுகிறது.

Update: 2019-07-10 22:45 GMT
தூத்துக்குடி, 

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு) குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் போலீசாரால், மதுபானம் கடத்திய வழக்குகளில் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 56 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த வாகனங்கள் வருகிற 30-ந் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பகிரங்க ஏலம் விடப்பட உள்ளது.

இந்த வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புகிறவர்கள் தகுந்த முன்பணம் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏலம் விடப்படும் வாகனங்கள் மற்றும் விவரங்களை தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை 0461-2340300 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

இந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு, கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு, தெர்மல்நகர், தட்டப்பாறை, ஆத்தூர், குளத்தூர், கடம்பூர், தூத்துக்குடி மத்திய பாகம், தென்பாகம், கோவில்பட்டி கிழக்கு, குலசேகரன்பட்டினம், சங்கரலிங்கபுரம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், திருச்செந்தூர் தாலுகா, தாளமுத்துநகர், ஆறுமுகநேரி ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு நேரில் சென்றும் பார்வையிடலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்