பல்லடம் நூல்மில்லில் வேலை பார்த்த ஒடிசா பெண்ணுக்கு பாலியல் தொல்லை - உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் அமைப்பினர் மனு

பல்லடம் நூல் மில்லில் வேலை பார்த்த ஒடிசா பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு பெண்கள் கூட்டமைப்பினர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2019-07-10 22:45 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ஒரு நூல் மில்லில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நூல் மில்லின் உரிமையாளர், அந்த பெண் தொழிலாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும் புகார் மனு கொடுப்பதற்காக ஈரோடு பெண்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.

அவர்கள் சமூக நல அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது சகோதரர்களுடன், கடந்த சில மாதங்களாக பல்லடம் கரடிவாவி அருகில் உள்ள ஒரு நூல் மில்லில் வேலைபார்த்து வந்தார். 12 மணி நேர வேலை, நாள் ஒன்றுக்கு ரூ.600 சம்பளம் என்ற அடிப்படையில் இவர்களை நூற்பாலை நிர்வாகம் பணிக்கு அமர்த்தியுள்ளது.

ஆனால் கடந்த 6 மாதத்தில் ஒருமுறை கூட ஊதியம் முழுமையாக வழங்கவில்லை. செலவுக்கு மட்டுமே சிறு தொகையை அவ்வப்போது வழங்கியுள்ளனர். இந்த நிலையில், நூல் மில்லின் உரிமையாளர், பெண்ணுக்கு அவ்வப்போது பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால், சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று முடிவு செய்த அவர், நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கும்படி, உரிமையாளரிடம் கேட்டுள்ளார். ஆனால், நிறுவன உரிமையாளர் சம்பளத்தை தரமறுத்ததோடு, கொலைமிரட்டலும் விடுத்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தொகையை வழங்க வேண்டும். வேலை இல்லாமல் போனதற்கான இழப்பீட்டு தொகையை வழங்குவதுடன், பாலியல் தொல்லை கொடுத்த மில் உரிமையாளர் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த பட்ச ஊதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? என்பதையும், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தடுப்பு புகார் குழுக்கள் செயல்படுகிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும். நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை ஒட்டு மொத்தமாக பதிவு செய்வதை தவிர்த்து தனித்தனியாக அவர்களின் பெயர், முகவரி முழுவிவரத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்