சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை

சேலத்தில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

Update: 2019-07-10 23:15 GMT
சேலம், 

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியுற்றனர். நேற்று முன்தினம் மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று காலை வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்தது.

பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் இருள்சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 1½ மணி நேரத்துக்கு மேலாக இந்த மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. பள்ளிகள் முடிவடையும் நேரத்தில் பலத்த மழை பெய்ததால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதியுற்றனர். மாணவர்கள் பலர் மழையில் நனைந்தபடி வீடு திரும்பினர். சில மாணவ, மாணவிகள் நனையாமல் இருப்பதற்காக புத்தகப்பையை தலையில் வைத்துக் கொண்டு சென்றதை பார்க்க முடிந்தது.

மழையின் போது பலத்த காற்று வீசியதால் ஆங்காங்கே மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன. மேலும் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை சரி செய்யும் பணியில் போலீசார் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். வெயிலினால் அவதியடைந்து வந்த பொதுமக்கள் இந்த மழையினால் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக காடையாம்பட்டியில் 17 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு வருமாறு:-

சங்ககிரி-14.4 மி.மீ., எடப்பாடி-10 மி.மீ., ஏற்காடு-5.2 மி.மீ., மேட்டூர்-2.4 மி.மீ.

இதே போல எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 30 நிமிடம் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளிலிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. எடப்பாடி பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கியது. மழைநீர் சாலைகளில் சென்றதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கொங்கணாபுரம் மற்றும் பூலாம்பட்டியிலும் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கியது விவசாயிகள்,பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இதே போன்று நேற்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது.

மேலும் செய்திகள்