குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - பெண்ணாடத்தில் பரபரப்பு

பெண்ணாடத்தில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-10 22:45 GMT
பெண்ணாடம், 

பெண்ணாடம் பேரூராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு இருளர் தெருவில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 3 மாதமாக அப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் கடந்த ஒரு வாரமாக முற்றிலும் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் குடிநீருக்காக அப்பகுதி மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் பெண்ணாடம் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் திட்டக்குடி- விருத்தாசலம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், எங்கள் பகுதியில் கடந்த 3 மாதமாக சரியான முறையில் குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் குடிநீருக்காக பெரும் சிரமங்களுக்கு மத்தியில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம். எனவே எங்களுக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதற்கு போலீசார், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் திட்டக்குடி- விருத்தாசலம் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்