விழுப்புரம் அருகே, சிறுமியை கடத்தி திருமணம் - ‘போக்சோ’ சட்டத்தில் வேன் டிரைவர் கைது

விழுப்புரம் அருகே சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்த வேன் டிரைவர், ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-07-11 22:30 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி, பிளஸ்-2 வரை படித்துள்ளார். இவர் தற்போது புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே கம்பெனியில் வேன் டிரைவராக பணியாற்றி வரும் வானூர் தாலுகா உப்புவேலூரை சேர்ந்த கண்ணாயிரம் மகன் மணி (22) என்பவருக்கும் கடந்த 6 மாதமாக பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 5-ந் தேதி வேலைக்கு சென்ற சிறுமி, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தங்கள் மகளை தேடினர். இருப்பினும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவர்கள், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில் தங்கள் மகளை, மணி கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் மகளை மீட்டுத்தரும்படியும் கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை மணி கடத்திச் சென்று திருமணம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று மணியை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறுமியை மீட்டனர். பின்னர் மணியை விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்