ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், குடியிருப்பு கட்டுவதற்காக 10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டும் பணி

ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டும் பணியால் சாலையோர தடுப்புச்சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது.

Update: 2019-07-11 22:45 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் பழமையான ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஊட்டி பிரிக்ஸ் பள்ளி அருகே உள்ளது. ஆரம்ப காலத்தில் ஊட்டி ஊராட்சி ஒன்றியம் சார்பில், கல்வி, சுகாதாரம், மருத்துவம், வேளாண்மை, கால்நடை ஆகிய துறைகள் செயல்படுத்தப்பட்டு வந்தன. நாளடைவில் துறைகள் பிரிக்கப்பட்டதால், மேற்கண்ட துறைகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது சமூக நலத்திட்டங்கள், கிராமப்புறங்களில் சாலை, குடிநீர், ஊராட்சி பள்ளிகளுக்கான கட்டிடங்கள், சமுதாயக்கூடம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொறியியல் பிரிவு, வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களும் இயங்கி வருகிறது. அந்த வளாகத்தில் எச்.ஏ.டி.பி. அரங்கம் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அலுவலக நுழைவுவாயில் பகுதியில் ரூ.46 லட்சம் மதிப்பில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருக்கு குடியிருப்பு கட்டுவதற்காக, பொக்லைன் எந்திரம் மூலம் இரவு, பகலாக சுமார் 10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.

குடியிருப்பு கட்டுவதற்காக அலுவலக நுழைவுவாயில் அருகே இருந்த தடுப்புச்சுவரின் ஒருபகுதி இடித்து அகற்றப்பட்டு உள்ளது. மேலும் வளாகத்தில் மண் அதிகளவில் தோண்டி அகற்றப்பட்டு வருவதால், அதையொட்டி கட்டப்பட்டு உள்ள தடுப்புச்சுவர் எப்போது வேண்டுமானலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அந்த வழியாக இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சென்று வருவதோடு, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நடந்து சென்று வருகின்றனர். மேலும் வாகனங்களை நிறுத்துவதால், ஏதேனும் விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்