கிருஷ்ணாபுரத்தில் விலையில்லா மடிக்கணினி கேட்டு சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

கிருஷ்ணாபுரத்தில் விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-07-11 23:00 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2017-18-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பயின்ற 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி தர வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியரிடம் பலமுறை முறையிட்டுள்ளனர். ஆனால் இதுவரை மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவ- மாணவிகள் நேற்று காலை பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் அரசிடம் இருந்து மடிக் கணினி வந்தவுடன் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்