வேட்டமங்கலம் ஊராட்சியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு

வேட்டமங்கலம் ஊராட்சியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-07-11 23:00 GMT
நொய்யல்,

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் சில மாதங்களாக 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நொய்யல், அத்திப்பாளையம், சேமங்கி, செட்டிதோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து நவீன எந்திரங்கள் மூலம் 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் தினமும் தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது. இதனால் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் குடிநீர் குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் நொய்யல் குறுக்குசாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த புகளூர் தாசில்தார்(பொறுப்பு) மகுடீஸ்வரன், துணை தாசில்தார் தனசேகரன், அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், தண்ணீர் எடுத்து செல்லும் லாரிகள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே ஆழ்துளை கிணறுகளில் இருந்து லாரிகளுக்கு தண்ணீர் ஏற்றும் குழாய்களை அகற்றும் பணிகளில் அதிகாரிகள், போலீசார் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்