வீரபாண்டி அருகே இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் கொலை உடலை வீட்டிற்குள் போட்டு கதவை பூட்டிச்சென்ற ஆசாமிகள்

திருப்பூர் வீரபாண்டி அருகே இரும்பு கம்பியால் தாக்கி வாலிபரை கொலை செய்து விட்டு, அவருடைய உடலை வீட்டிற்குள் போட்டு கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு மர்ம ஆசாமிகள் தப்பி சென்றுள்ளனர். இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-07-11 22:00 GMT
வீரபாண்டி, 

திருப்பூர் வீரபாண்டியை அடுத்த பலவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது 46). இவர் அந்த பகுதியில் 30 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இதில் 28 வீடுகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி பல்வேறு பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று வருகிறார்கள். மற்ற 2 வீடுகளிலும் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி இருந்த 2 வீடுகளும் கடந்த சில நாட்களாக பூட்டிக்கிடந்தது. இதில் ஒரு வீட்டில் இருந்து நேற்று தூர்நாற்றம் வீசியது. இதைடுத்து அருகில் இருந்தவர்கள் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வீட்டின் உரிமையாளர் அங்கு விரைந்து வந்தார். அப்போது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார்.

அப்போது அங்கு அவர் கண்ட காட்சி அவரை திடுக்கிட வைத்தது. காரணம் வீட்டிற்குள் அழுகிய நிலையில் 30 வயது மதிக்க வாலிபர் பிணமாக குப்புற கிடந்தார். இது குறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்தவரின் பின் தலையில் காயம் இருப்பதும் தெரியவந்தது. இதனால் மர்ம ஆசாமிகள், அந்த வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து பிணத்தை அங்கேயே போட்டு, வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு மர்ம ஆசாமிகள் தப்பி சென்று இருக்கலாம் என்றும், கொலை நடந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த உடலை போலீசார் கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கொலை நடந்த அறையில் தங்கி இருந்தவர்கள் யார், யார்? அவர்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள்? என்று வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்