ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பேட்டி

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன என்று போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறினார்.

Update: 2019-07-11 22:45 GMT
கடத்தூர், 

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நேற்று கோபி போலீஸ் நிலையத்தில் பணிகள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். பின்னர் 28 பெண் பயிற்சி போலீசாருக்கு பயிற்சி அளித்தார்.

அதை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் போலீசார் சாலை விபத்தில் உயிர் பலியாவதையும், குற்றங்களை தடுக்கவும் முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். குற்றவாளிகளை உடனே பிடிக்க ஈரோட்டில் 26 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கோபி, சத்தியமங்கலம் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளன. விபத்துக்களை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டுபிடிக்க முடியும். ஈரோடு மாவட்டத்தில் 530 நுழைவு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. நுழைவு பகுதிகள் அனைத்தும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே நேரடியாக கண்காணிக்கப்படுகிறது.

அவசரத்தில் செல்லும் 108 ஆம்புலன்ஸ் தடையின்றி ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல எடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் மாநிலத்திலேயே ஈரோடு மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளது.

கிராம பகுதிகளில் தனியாக அமைந்துள்ள வீடுகளில் வசிப்பவர்கள் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திக்கொள்ள வேண்டும். தரமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டால் மட்டுமே குற்றவாளிகளை தெளிவாக அடையாளம் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க முடியும். வாகனங்களில் செல்லும்போது உயிரிழப்பை தவிர்க்க ஹெல்மெட் அணிவது அவசியம். இதுகுறித்து பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது ஹெல்மெட் அணிவதில் பொதுமக்கள் தயக்கம் காட்டுகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன. இதுவரை ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் வந்த 1,200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணிந்தால் ஏற்படும் கஷ்டத்தைவிட வாகன விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஆதரவின்றி தவிப்பது பெரும் கஷ்டம். இதை நேரடியாக உணர்வதால் தான் ஹெல்மெட் அணிய வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆய்வு செய்தார். அப்போது அவர் போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். இதில், போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்