செங்கம் அருகே 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்

செங்கம் அருகே 2 இடங்களில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-12 22:30 GMT
செங்கம், 

செங்கம் அருகே தாழையூத்து ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் சரியாக செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும் பொதுமக்கள் பலமுறை புகார் கூறியுள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தாழையூத்து செங்கம் சாலையில் நேற்று காலை காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்றையும் சிறை பிடித்தனர்.

மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோல் செங்கம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தில் கடந்த 4 மாதங்களாக சரியாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் அருகிலுள்ள விவசாய கிணறுகள் உள்ளிட்டவைகளில் தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டது.

குடிநீர் வினியோகம் செய்யாத ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளை கண்டித்து நேற்று காலை செங்கத்தில் இருந்து இளங்குண்ணி செல்லும் சாலையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மேல்செங்கம் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதனால் பள்ளி, கல்லூரி பஸ்கள் செல்ல முடியாமல் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் கரியமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அண்டபேட்டை கிராமத்திலும் குடிநீர் தேடி காலி குடங்களுடன் கிராம பெண்கள் அலைந்து வருகின்றனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராமத்திற்கு புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் எனவும், பழுதடைந்துள்ள மின்மோட்டார்கள், கைப்பம்புகள் உள்ளிட்டவைகளை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்