தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணி வழங்கக்கோரி, காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணி வழங்கக்கோரி காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-12 22:30 GMT
விழுப்புரம்,

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை, முழு கூலியான ரூ.229-ஐ வழங்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் விழுப்புரம் அருகே அகரம்சித்தாமூர், வாழப்பட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படவில்லை என தெரிகிறது.

இதனை கண்டித்தும், இத்திட்டத்தில் வேலையை உடனடியாக வழங்கக்கோரியும் நேற்று காலை மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்து அந்த அலுவலகத்தின் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட செயலாளர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ராதா கிரு‌‌ஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியை முழு கூலியுடன் வழங்கக்கோரி கோ‌‌ஷம் எழுப்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விரைவில் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதனை ஏற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்