இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி சீதாராம் யெச்சூரி பேச்சு

இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று சீதாராம் யெச்சூரி பேசினார்.

Update: 2019-07-12 22:15 GMT
நெல்லை, 

இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று சீதாராம் யெச்சூரி பேசினார்.

பொதுக்கூட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் நெல்லை மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலை கண்டன பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் உச்சிமாகாளி தலைமை தாங்கினார். தலைவர் மேனகா வரவேற்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டு, அசோக் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவியை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சாதி படுகொலைகள்

இந்திய சுதந்திர போராட்டத்தில் நெல்லை மண்ணுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. சுதந்திரத்துக்காக பாரதியார், வ.உ.சி. போன்றவர்கள் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தி உள்ளனர். அப்படிப்பட்ட மண்ணில் சாதிய படுகொலைகள் தொடர்ந்து நடப்பது, உயர்ந்த வரலாற்றை கொண்ட மண்ணை பின்நோக்கி தள்ளும் வகையில் உள்ளது.

இந்தியாவில் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே மதம் என்பதை கூறி வரும் மத்திய பா.ஜனதா அரசு, இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்க முயற்சி செய்கிறது. அதை பாதுகாக்க நாம் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இந்தியாவை பாதுகாக்கும் போராட்டத்தை கம்யூனிஸ்டு கட்சியினரால்தான் செய்ய முடியும். தேர்தல் நமக்கு பல படிப்பினைகளை தந்துள்ளது. தவறுகளை சரி செய்வோம், மக்களிடம் சென்று பேசி, அவர்களை ஒன்று திரட்டி பா.ஜனதா அரசை எதிர்ப்போம். இந்தியாவை பாதுகாப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கம்யூனிஸ்டு நிர்வாகிகள்

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு விடுதலை கட்சி மாநில செயலாளர் நடராஜன், ரெங்கசாமி, தேசிய தலைவர் முகமது ரியாஸ், மாநில தலைவர் ரெஜீஸ்குமார், மாநில செயலாளர் பாலா ஆகியோர் பேசினர்.

இதில் நெல்லை மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழனி, ராஜகுரு, நிர்வாகிகள் சுடலைராஜ், வரகுணன், கருணா, கைலாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்