சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தர்ணா போராட்டம் ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை

ஊதிய உயர்வு வழங்கக்கோரி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-12 22:15 GMT
சேலம், 

தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 14 ஆண்டுகள் பணியாற்றிய அரசு டாக்டர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேலத்தில் கடந்த 10-ந் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர் சங்க மாநில செயலாளர் செந்தில்குமார், மாவட்ட தலைவர் ராஜசேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கலந்து கொண்ட டாக்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பின்னர் இதுகுறித்து டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:-

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.

அதைத்தொடர்ந்து வருகிற 18-ந் தேதி பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளோம். ஆகவே எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்