மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சியின்போது பாரபட்சம் கூடாது - பள்ளிகல்வித்துறை நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டத்தில் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சியின் போது பாரபட்சம் காட்டப்படுவதை தடுக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2019-07-12 21:45 GMT
விருதுநகர்,

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல் தொடர்பாக புத்தாக்க பயிற்சி அளிக்க திட்டமிட்டு அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் புத்தாக்க பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. விருதுநகரில் பல்வேறு மையங்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

கடந்த 2 நாட்களாக விடுப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கும் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த புத்தாக்க பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் பயண செலவு, உணவு மற்றும் இதர செலவுகளுக்கான தொகை வழங்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு செலவு தொகை ஏதும் வழங்கப்படவில்லை.

இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டதற்கு எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே புத்தாக்க பயிற்சியில் கலந்து கொண்ட அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி ஆசிரியர்களை பாரபட்சமாக நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அரசு வழங்கும் செலவு தொகையினை வழங்க பள்ளிகல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்