ஜனநாயகத்தின் புகழுக்கு பங்கம் ஏற்படாமல் பணியாற்றுவேன் சபாநாயகர் ரமேஷ்குமார் பேட்டி

ஜனநாயகத்தின் புகழுக்கு பங்கம் ஏற்படாமல் பணியாற்றுவேன் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் கூறினார்.

Update: 2019-07-12 22:30 GMT
பெங்களூரு, 

ஜனநாயகத்தின் புகழுக்கு பங்கம் ஏற்படாமல் பணியாற்றுவேன் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் கூறினார்.

கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமார் பெங்களூருவில் நேற்று காலையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அழுத்தம் கொடுக்கட்டும்

கர்நாடக மக்களின் மனதுக்கு ஏற்பட்டுள்ள வேதனைக்கு மரியாதை கொடுத்து எனது கடமையை சரியான முறையில் நிர்வகிப்பேன். அரசியல் சாசனத்திற்கு பங்கம் ஏற்படுத்த மாட்டேன். நாடு, நீதித்துறை, சட்டசபையை பாதுகாக்க வேண்டும். அரசியல் சாசனப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக நான், ஜனநாயகத்தின் புகழுக்கு பங்கம் ஏற்படாமல் பணியாற்றுவேன். அதற்கு கவுரவம் கொடுத்து பணியாற்றுகிறேன்.

யாரையாவது குஷிப்படுத்துவதோ அல்லது சந்தோஷப்படுத்துவதோ எனது வேலை அல்ல. யார் வேண்டுமானாலும் எனக்கு அழுத்தம் கொடுக்கட்டும். ஆனால் சட்டப்படி எனது பணியை செய்வேன். மகாத்மா காந்தியையே கொன்ற நாடு இது. ஆனால் காந்தியின் கொள்கை, கோட்பாடுகள் உயிரோடு தான் இருக்கின்றன.

பணிய மாட்டேன்

எனக்கு எதிராக சிலர் தவறான தகவல்களை பரப்பி எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள். அவ்வாறு செய்கிறவர்கள் செய்யட்டும். அவர்களுக்கு நல்லது நடக்கட்டும். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் என்னிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர்.

அந்த ராஜினாமா கடிதங்கள் மீது சட்டப்படி ஆலோசித்து முடிவு எடுப்பேன். இந்த விஷயத்தில் யாருடைய அழுத்தத்திற்கும் பணிய மாட்டேன். ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களை இன்று (அதாவது நேற்று) விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளேன். காங்கிரஸ் கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது குறித்து எனக்கு தெரியாது.

இவ்வாறு ரமேஷ்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்