மும்ராவில் ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு ஒருவர் கைது

மும்ராவில் ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 1½ வயது சிறுவனை மீட்ட போலீசார், கடத்தல் ஆசாமியையும் கைது செய்தனர்.

Update: 2019-07-12 23:00 GMT
தானே,

மும்ராவில் ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 1½ வயது சிறுவனை மீட்ட போலீசார், கடத்தல் ஆசாமியையும் கைது செய்தனர்.

சிறுவன் கடத்தல்

தானே மாவட்டம் மும்ராவை சேர்ந்தவர் மோனு குமார். இவருக்கு 1½ வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த 6-ந் தேதி அன்று அந்த சிறுவனை அவனது சித்தப்பா அவ்தேஷ்குமார் வெளியில் தூக்கி சென்றார். அவருடன் அவரது நண்பர் நாகேஷ் என்பவரும் சென்றிருந்தார். சிறிது தூரம் சென்ற நிலையில், அவ்தேஷ்குமார் சிறுவனை நாகேஷிடம் கொடுத்து விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார். பின்னர் திரும்பிய போது நாகேசை காணவில்லை. அவர் சிறுவனுடன் தலைமறைவானது தெரியவந்தது. இருவரையும் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் இதுபற்றி மோனுகுமாரின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

கைது

இதில் மோனுகுமாரின் குடும்பத்தினருக்கு போன் செய்த நாகேஷ் சிறுவனை உயிரோடு ஒப்படைக்க வேண்டுமானால் ரூ.5 லட்சம் தர வேண்டும் என மிரட்டினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் பேசிய செல்போன் எண் இருக்கும் இடத்தை ஆராய்ந்த போது, அவர் பால்கர் மாவட்டம் பொய்சரில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று நாகேசை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த சிறுவனையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்