புத்திரகவுண்டம்பாளையத்தில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி

புத்திரகவுண்டம்பாளையத்தில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலியானாள். இதனால் போலீஸ் வேனை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-12 22:00 GMT
பெத்தநாயக்கன்பாளையம்,

பெத்தநாயக்கன்பாளையம் அருகே புத்திரகவுண்டம்பாளையம் தேவேந்திரன்நாடு பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு ஹன்சிகா (வயது 7), ஹன்சிக் (6), ஹாசிகா (5) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர்.

தேவேந்திரன் நாடு பகுதியில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டம் கூட்டமாக தேர்த்திருவிழா நடைபெறும் இடத்துக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

நேற்று மாலை 5 மணியளவில் கோவில் அருகில் மைக்கேல்ராஜின் 3-வது மகள் ஹாசிகா விளையாடிக் கொண்டிருந்தாள். அந்தநேரத்தில் வேப்பம்பூண்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் (70) என்பவர் களரம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு டிராக்டரை எடுத்துக் கொண்டு கோவிலின் எதிரே வந்தார்.

அப்போது ஹாசிகா டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உயிருக்கு போராடி துடிதுடித்தாள். இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று சிறுமியை தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அவள் பரிதாபமாக இறந்தாள்.

இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், டிராக்டர் டிரைவர் ராஜேந்திரனை பிடித்து போலீஸ் வேனில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முயன்றனர். இதை பார்த்ததும் கிராம மக்கள் திரண்டு போலீஸ் வேனை சிறைபிடித்தனர். டிரைவர் ராஜேந்திரனை போலீஸ் வேனில் இருந்து கீழே இறக்கி விட வேண்டும் என்று ஆத்திரத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி, காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். சுமார் 3 மணி நேரம் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் பொதுமக்கள் போலீஸ் வேனை விடுவித்தனர். ஆனால் சிறுமி உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் தர மறுத்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் போலீசாரிடம் சிறுமியின் உடலை ஒப்படைத்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின் சிறுமியின் உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்க வேண்டும் என தாயார் பிரியாவிடம் கேட்டபோது தன் குழந்தையை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் கூறி காலில் விழுந்து கதறி அழுதார். இந்த சம்பவம் பார்ப்பவர் மனதை கண்கலங்க செய்தது.

மேலும் செய்திகள்