ஜோலார்பேட்டை பகுதியில் பலத்த மழை: மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

ஜோலார்பேட்டை அருகே அறுந்து கிடந்த மின்வயரில் இருந்து மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-07-13 22:15 GMT
ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த பாய்ச்சல் குரும்பர் காலனியை சேர்ந்தவர் அனுமன் (வயது 55). இவர் திருப்பத்தூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான சைக்கிள் கடையில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இவர் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு, வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது ஜோலார்பேட்டை பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் பாய்ச்சல் ரெயில்வே குடியிருப்பு அருகில் மின்கம்பி அறுந்து கிடந்தது.

அதனை கவனிக்காத அனுமன் அந்த வழியை கடக்க முயன்றபோது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இரவு நேரம் என்பதால் யாரும் அதனை கவனிக்கவில்லை. மேலும் அவ்வழியாக சென்ற 2 பன்றிகளும் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது.

நேற்று காலை அந்த வழியாக நடைபயிற்சிக்கு சென்றவர்கள் மின்கம்பி அறுந்து ஒருவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் அனுமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் குளம்போல் மழைநீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

மின்னல் தாக்கியதில், ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி முதலைமடுவு, சக்கரகுப்பம் பால்கார வட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 2 மின்சார டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த டிரான்ஸ்பார்மர்களை சரிசெய்ய முயன்றனர். ஆனால் சரிசெய்ய முடியவில்லை.

புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைத்தால் தான் அப்பகுதி மக்களுக்கு மின்இணைப்பு கொடுக்க முடியும். இதனால் அந்த 2 கிராம மக்களும் இதுவரை மின்சாரம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் புதிய டிரான்ஸ்பார்மர் வரவழைத்து மின்சாரம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்