ஒரே ஆண்டில் 3 முறைக்கு மேல் ரத்ததானம் செய்த தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே ஆண்டில் 3 முறைக்கு மேல் ரத்ததானம் செய்த தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கலெக்டர் ஆசியா மரியம் பாராட்டினார்.

Update: 2019-07-13 22:30 GMT
நாமக்கல், 

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 14-ந் தேதி உலக ரத்த கொடையாளர்கள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

இதன் தொடர்ச்சி்யாக கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரத்த கொடையாளர்கள் மற்றும் அமைப்பாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு கல்லூரி, தனியார் நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கும், ஓர் ஆண்டில் 3 முறைக்கு மேல் ரத்தம் தானம் செய்த 40 தன்னார்வ ரத்த கொடையாளர்களுக்கும், 100 ரத்ததான முகாம் அமைப்பாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ்களை போலீஸ் சூப்பிரண்டு அருளரசு முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 93 முறை ரத்ததானம் செய்த எர்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன், 52 முறை ரத்ததானம் செய்த நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் மருத்துவ அலுவலர் கண்ணன் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட ரத்த பரிமாற்று அலுவலர் அன்புமலர், ரத்த வங்கி அலுவலர்கள் சிவக்குமார் (திருச்செங்கோடு), ஸ்ரீதேவி (ராசிபுரம்), மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் மருத்துவ அலுவலர் ராமசாமி உள்பட டாக்டர்கள், ரத்த வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்