எடப்பாடி அருகே நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 8½ பவுன் நகை பறிப்பு

எடப்பாடி அருகே, நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 8½ பவுன் நகையை 2 மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து தப்பிய அந்த மர்ம நபர்கள் குறித்து கண்காணிப்பு கேமரா பதிவை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-07-13 22:15 GMT
எடப்பாடி, 

எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி செல்லியாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மனைவி உண்ணாமலையம்மாள் (வயது 65). இவர்களுக்கு ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனர். இவரது மகன் ஞானவேல் சென்னையில் தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். 4 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.

கணவர் தங்கவேல் இறந்து விட்டதால், உண்ணாமலையம்மாள் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். தினமும் காலையில் நடைபயிற்சிக்காக பஸ்நிலையம் வரை சென்று வருவது வழக்கம். நேற்று காலை 8 மணியளவில் உண்ணாமலையம்மாள் நடை பயிற்சிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

சின்னமாரியம்மன் கோவில் அருகில் வந்து கொண்டிருந்த போது, எதிரே மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்து கொண்டு மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென்று உண்ணாமலையம்மாளின் கழுத்தில் அணிந்திருந்த 8½ பவுன் நகையை பறித்துக்கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

தகவல் அறிந்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர். காலை 8 மணியளவில் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

இதனிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அருகில் உள்ள வீடுகளின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டனர். அதில் இருந்த மர்ம நபர்களின் உருவங்களை வைத்து நகையை பறித்து சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்