கல்வராயன்மலை கோடை விழாவில் ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள்

கல்வராயன்மலையில் நடைபெற்ற கோடை விழாவில் ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.

Update: 2019-07-13 21:45 GMT
கச்சிராயப்பாளையம், 

விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையில் நடைபெற்ற கோடை விழாவை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் வனத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாவட்ட சிறுபான்மை நலத்துறை, தோட்டக்கலைத்துறை சமூகநலத்துறை, வருவாய்த்துறை, தொழில்மையம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் 1,987 பயனாளிகளுக்கு 1 கோடியே 8 லட்சத்து 71 ஆயிரத்து 867 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கல்வராயன்மலையை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதில் தமிழக அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. கல்வராயன்மலையில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.6 கோடியே 9 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது. கல்வராயன்மலையில் உள்ள மக்களுக்கு குடியுரிமை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. வனகிராம வளர்ச்சிக்குழு சார்பில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏறத்தாழ ரூ.14 லட்சம் மதிப்பில் கடன் வழங்கப்பட உள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது:-

விழுப்புரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களை இணைக்கும் மலையாக இந்த கல்வராயன்மலை உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் மலையாக உள்ள இந்த கல்வராயன்மலை கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 259 அடி உயரத்தில் உள்ளது. இந்த மலையில் 7 நீர் வீழ்ச்சிகள் உள்ளன. இந்த நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலாத்துறை சார்பில் கல்வராயன்மலையில் ரூ.60 லட்சம் மதிப்பில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் சுற்றுலா துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோமுகி அணை மற்றும் கல்வராயன்மலை பகுதியில் ரூ.39 லட்சம் மதிப்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்